வத்தல்மலை அரசு பள்ளிகளில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு

வத்தல்மலை அரசு பள்ளிகளில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-14 05:15 GMT

வத்தல்மலை அரசு பள்ளிகளில் தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் ஆய்வு நடத்தினார்.

தர்மபுரி மாவட்டம், வத்தல்மலை பெரியூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது அந்த பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை கூட்டமும், குழந்தை பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகள் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் அமைக்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு விரைவில் உரிய பயிற்சி வழங்கப்படும். இதேபோல் கிராம, நகர, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து வலுப்படுத்தப்பட வேண்டும். கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு செயலாளர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும்.

தமிழக அரசு கடந்த மாதம் பிரகடனம் செய்துள்ள அரசின் குழந்தை பாதுகாப்பு கொள்கை குழந்தைகள் உரிமைகளின் வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும். இக்கொள்கையின்படி கிராம குழந்தைகள் சபை கூட்டங்கள் நடத்தப்படும். இதைப் போலவே நகர குழந்தைகள் சபை, மாநகர குழந்தைகள் சபை போன்றவற்றையும் நடத்தலாம். இத்தகைய குழந்தைகள் சபைகள் குழந்தைகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் தளமாக அமைவதோடு பிரச்சினைகளுக்கான தீர்வையும் தரும் மன்றமாக விளங்கும். குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அனைத்தும் மாவட்ட குழந்தைகள் அலகின் கீழ் ஒற்றை கண்காணிப்பில் இயங்க வேண்டும்.இத்தகைய மாற்றங்கள் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News