கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9- ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனைக்கு பின், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தர்மபுரி மாவட்ட ஊராட்சி 18- வது வார்டு குழு உறுப்பினர் (எஸ்.டி.பொது) பதவிக்கு போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.,அ.ம.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 4 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் 8 பேர் போட்டியிடுகிறார்கள்.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்லனஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த 3 பேரின் மனுக்களும் பரிசீலனைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு தற்போது யாரும் போட்டியிடவில்லை.
இதேபோல் 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் பி.கொல்லஅள்ளி- வார்டு எண் 2, பங்கு நத்தம் வார்டுஎண்- 5, மானியத அள்ளி வார்டு எண்- 7, கோட்டப்பட்டி வார்டு எண்- 4, மருதிபட்டி வார்டு எண்- 2, பெரியபட்டி வார்டு எண் - 8, சிட்லிங் வார்டு எண் - 1, ஆர்.கோபிநாதம்பட்டி வார்டுஎண் - 6, மெணசி வார்டு எண்- 8, மூக்காரெட்டிபட்டி வார்டு எண்- 3 ஆகிய 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்; அந்த 10 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எச்சனஅள்ளி(வார்டு எண் 2)-ல் 2 பேரும், சில்லாரஅள்ளி (வார்டு எண் 2)-ல் 3 பேரும் போட்டியிடுகிறார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 3 பதவிகளுக்கு மொத்தம் 13 பேர் போட்டியிடுகிறார்கள்.