பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு தேர்தல் புறக்கணிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி பஞ்.க்கு உட்பட்டது நொனங்கனூர். இக்கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இம்மக்களுக்கு சுடுகாடு வசதி இருந்தும் அதற்கு பாதை வசதி இல்லை.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று காலை அக்கிராம மக்கள் வருகின்ற 18-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மண்டல துணை வட்டாட்சியர் மணி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் பிரசாத், பட்டுகோணாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை யில் சமரசம் ஏற்படாததால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.