திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் முறைகேடு: உறுப்பினர்கள் வெளிநடப்பு
தர்மபுரி அருகே திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் நிதி முறைகேடு செய்துவருவதாக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தர்மபுரி அருகே திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் அதிகளவில் நிதி முறைகேடு செய்துவருவதாக பலமுறை புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம்,பொம்மிடி அருகே உள்ளது திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி. இதில் குக்கல்மலை, திப்பிரெட்டிஅள்ளி, மணிபுரம், ராமநாதபுரம், ராமதாஸ் நகர், சந்தனூர்மேடு சொரக்கப்பட்டி, தாளப்பள்ளம்கொட்டாய், சின்ன புதுகொட்டாய், கொளந்தை கவுண்டன்கொட்டாய், உள்ளிட்ட 26 குக்கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை.
அரசால் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் பஞ்சாயத்து தலைவர் முறைகேடு, இதுமட்டுமல்லாமல் சுகாதார கழிப்பிடம் கட்டுவதில் மோசடி, குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பதாக கூறி அமைக்கப்படாமல் நிதி மோசடி, என பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து கவிதா, மேகலா, யமுணாதேவி, ராஜகுமாரி, சுமதி, சக்திவேல் ஆகிய ஏழு வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உறுப்பினர்கள் கூறும்போது, முறைகேடாக கையெழுத்திட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பஞ்.,நிர்வாகத்தில் தலைவர் சித்ரா கணவர் சுப்பிரமணி தலையீடு அதிகமாக உள்ளது. எந்த தீர்மானங்கள் மக்கள் முன்னனியில் செய்வதில்லை. அவர்களே தீர்மானம் எழுதி அதில் கையெழுத்து போட வரும் மன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்துகின்றனர்.
வேலை செய்யாமல் பணம் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நூறு நாள் வேலை திட்டத்தில் அதிக அளவில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டாத பாத்ரூமிற்கு கட்டிய தாக பில் போட்டு அதிகளவில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே முறையாக தணிக்கை செய்ய வேண்டும்.
பஞ்சாயத்தில் தலைவரின் கணவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் அஸ்வினி கணவர் திருமால் ஆகியோரின் தலையீடு உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம், மூன்று முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே உடனடியாக தணிக்கை செய்து முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழி இல்லை என வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.