பொ.மல்லாபுரத்தில் திமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் நீக்கம்
பொ.மல்லாபுரத்தில் திமுக நகர செயலாளர், முன்னாள் பேரூராட்சித் தலைவர் உள்பட 5 பேரை திமுக தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது.;
உதயகுமார்
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் 10 பேரூராட்சி ஒரு நகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சி, ஒரு நகராட்சியில் திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் திமுக 8, பாமக 3, விசிக 2 உறுப்பினர்கள் என வெற்றி பெற்றிருந்தனர். கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில், திமுகவை சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் புஷ்பராஜ் மனைவி சாந்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் சின்னவேடி 7 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவை சேர்ந்த புஷ்பராஜ் மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர், உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு கூட்டணி கட்சியினருக்கு வழங்கும்படி உத்தரவிட்டார். ஆனால் திமுக தலைமை உத்தரவையும் மீறி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாந்தி புஷ்பராஜ் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என தெரிவித்து வந்தார்.
பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், புஷ்பராஜியிடம் தலைமை உத்தரவுபடி ராஜினாமா செய்ய வேண்டும் என பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி முயற்சித்தார். ஆனால் தலைமை என்னை கட்சியை நீக்கி கொள்ளட்டும், நான் பதவியை விட்டு விலக மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை தன்னை பதவி விலகச் சொல்லி நெருக்கடி கொடுத்தால், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி கணவர் புஷ்பராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பொ.மல்லாபுரம் திமுக நகர செயலாளர் உதயகுமார், ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன் குமார் ஆகிய 5 பேர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது கட்சித் தலைமையை உத்தரவை மதிக்காமல் பேரூராட்சி தலைவராக நீடித்து வரும் சாந்தி புஷ்பராஜ் ராஜினாமா செய்யாததால், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படுவதற்கு திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை திமுகவினரும், விசிகவினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.