பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தாலூகா சிறப்பு குறைத்தீர் முகாமில் 10 ஆயிரம் மனுக்கள்

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தாலூகா சிறப்பு குறைத்தீர் முகாமில் 10 ஆயிரம் மனுக்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் பெற்றார்.

Update: 2021-12-16 06:15 GMT

சிறப்பு குறைத்தீர் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் பெற்றார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஸ்ரீ நாராயணா கல்யாண மண்டபம், அரூர் வட்டம், என்.என்.மஹால், அரூர் வட்டம், மொரப்பூர், செந்தூர் மஹால் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர், நித்ய ஸ்ரீனிவாச கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நேற்று நடைபெற்றது.

இச்சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தலைமை வகித்தார். இச்சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம். முதல்வர் ஆன உடன் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். தெரிவித்ததை போலவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் அடங்கிய பெட்டிகளை திறந்து தகுதியான மனுக்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு ஏற்படுத்தினார். இவ்வாறு லட்சக் கணக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்திய ஆட்சி திமுக ஆட்சி.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் 2 நாட்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் கோரிக்கை மனுக்கள் அளிக்க விடுபட்ட மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்து, தகுதியான மனுக்களை ஏற்றுக்கொண்டு, அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் தகுதியான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவையான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும்.

ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகள், உதவிகள் ஆகியவற்றை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆட்சி. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, அனைவரும் பாராட்டும் விதமாக நாட்டிற்கே அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை ஆட்சிசெய்து வருகின்றார். நேற்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார்கள். இதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.2 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள் மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 645 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 8385 உறுப்பினர்களுக்கு ரூ.55.06 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த வாரம் கூட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மாடித் தோட்டத் தளைகளையும், ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச் சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளையும் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களை தொடங்கிவைத்தார்கள். இதேபோல் நாள்தோறும் எண்ணற்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகின்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தர்மபரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட நீரை வழங்க ஏதுவாக தனியாக நீர்தேக்க தொட்டிகள் (டேங்குகள்) அமைக்க ஏற்பாடு செய்யப்படும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம், அதிக அளவில் விவசாயம் மேற்கொண்டு, தர்மபுரி மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் இச்சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க வந்துள்ளார்கள். இது, இந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை காட்டுகிறது. நான், தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, தர்மபுரி மாவட்டத்தின் வட்டங்களில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற ஏற்பாடு செய்துள்ள மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.

தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறோம். இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கான தீர்வு முதலமைச்சர் கைகளாலேயே வழங்கப்படும். மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நம் முதல்வர் நாட்டுக்கே அடையாளமாக இருக்கிறார். தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 2518 மனுக்களும், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2900 மனுக்களும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களை துறை ரீதியாக தொகுத்து, முறையாக பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவத்தார்.

இதனைதொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த பொதுமக்களிடம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, தகனமேடை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார்.

இச்சிறப்பு முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராமதாஸ், உதவி ஆணையர் கலால் தணிகாச்சலம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், வட்டாட்சியர்கள் சுப்பரமணி (பாப்பிரெட்டிபட்டி), கனிமொழி (அரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.அருள்மொழித்தேவன் (பாப்பிரெட்டிப்பட்டி), கா.தனபால் (அரூர்), திரு.ஏ.மதலைமுத்து (மொரப்பூர்), கே.ரங்கநாதன் (கடத்தூர்), ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் உண்ணாமலை குணசேகரன், சுமதி செங்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லதா தாமரைசெல்வன், ஊராட்சி ஒன்றியக்குழுத் துணை தலைவர் அருணா இளஞ்செழியன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News