காரிமங்கலத்தில் பேரீட்சை சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் - சாதித்தது எப்படி?
தருமபுரி காரிமங்கலம் பகுதியில் பேரீட்சை சாகுபடியில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அசத்தி வருகிறார்.
பாலைவனப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பேரீட்சையை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேல்முருகன்.
இவர், தனது விவசாய நிலத்தில் பேரீட்சை சாகுபடி செய்துள்ளார். பேரீட்சை சாகுபடியில் 100க்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும், அதில் தரமானதாக கண்டறியபட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், இலைட் போன்ற ரகங்களை தேர்வு செய்து, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடையே பேரிட்சையை நடவு செய்துள்ளார்.
நடவு செய்த மூன்று வருடத்திலேயே, பேரீட்சை பலன் தர தொடங்கியுள்ளது. தற்போது, முதல் அறுவடையாக பேரீட்சை பழங்கள் அறுவடைக்கு வரத்தொடங்கியுள்ளன.பேரீட்சை சாகுபடி குறித்து, 'இன்ஸ்டாநியூஸ்' இணையதள நிருபருக்கு வேல்முருகன் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம், அரியக்குளம் கிராமத்தில் பலவருடமாக பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் அனுபவம் பெற்ற விவசாயியான நிஜாமுதின் ஆலோசனை பெற்று, அவா் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபட்ட பேரீட்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி, ஒய்வு பெற்றபின் வருவாய் ஈட்டும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தேன்.
இந்த ஆண்டு அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். சரியாக முன்கூட்டியே திட்டமிட்டதால் தற்போது பேரீட்சை சாகுபடி மூலமாக வருவாய் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. தென்னை சாகுபடியில் மரம் ஒன்றுக்கு ஆண்டு வருவாயாக 800ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. பேரீட்சை மரத்தில் வரும் பேரீட்சை சாகுபடியில், 10ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றார்.