காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது
காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவுபடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, முரளி மற்றும் போலீசார், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் காரிமங்கலம் அருகே வாகனச்சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியில் சோதனை செய்தபோது, அதில் சுமார் 10.5 டன் எடைகொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சேலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியில் சிக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வேனில் வந்த ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது37), விஜயகுமார் (30) ஆகிய 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.