விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு 5 கோபுரம், 5 கொடிமரம்,5 தேர்,5 நந்தி என அனைத்துமே ஐந்தாக இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.தற்பொழுது விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர்,சுப்பிரமணியர்,விருத்தாம்பிகை,பாலாம்பிகை,விருத்தகிரீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்,பெரியநாயகர்,நடராஜர் ஆகிய சாமிகளின் மூலவர்களின் கோபுரம் சீரமைக்கும் பணிக்காக பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் கால பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் காலை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க,விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர்.இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஆலய ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.