வேப்பூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டை வாங்குவதற்கு லஞ்சம்
சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை வாங்குவதற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்கள் இருவர் கைது;
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவர் தனது நிலத்தில் விளைந்த 200 மூட்டை நெல்லை விற்பதற்காக சென்றார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் மூட்டைக்கு ரூபாய் 50 லஞ்சம் கொடுத்தால்தான் மூட்டையை வாங்க முடியும் என தெரிவித்து விட்டனர். இதனால் மனவருத்தம் அடைந்த அழகுவேல் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை சிறுபாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றனர் அப்போது அழகுவேல் இடமிருந்து நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர் கிருஷ்ணசாமி பணத்தைப் பெற்று ராமச்சந்திரனிடம் வழங்கினார்
அப்போது கையும் களவுமாக அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை முடிந்த பிறகு கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.