விருத்தாசலம்: முந்திரிக் காட்டுப்பகுதியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தல்

விருத்தாசலம் அருகே, முந்திரிக் காட்டுப்பகுதியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-24 05:00 GMT

கோபுராபுரம் முந்திரிக் காட்டுப்பகுதியில்,  இரவில் ரேஷன் அரிசி கடத்திய லாரியை அதிகாரிகள் மடக்கினர். 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் முந்திரிக் காட்டுப்பகுதியில்,  இரவு ரேஷன் அரிசி கடத்துவதாக, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்பிரிவு போலீசார் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது, ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்தி எடுத்துச் செல்வதற்காக லாரியில் ஏற்ற முயற்சி செய்த நபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து சுற்றுவட்டார கிராமப்புற ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரசீது உடன் கூடிய 15 டன் ரேசன் அரிசி மூட்டைகள் என அறியப்பட்டது. அரிசி மூட்டையுடன் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்பு ,கடலூர் திருப்பாபுலியூர் குடோனுக்கு பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் அரிசி லாரியுடன் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து குடிமை பொருள் கடத்தல் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News