வடலூர் கோட்டகரை பழங்குடியினர் குடியிருப்பில் மழை நீரால் தவிக்கும் மக்கள்
வடலூர் கோட்டக்கரை பழங்குடியினர் குடியிருப்பில் மழை நீர் நிற்பதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டகரையில் பழங்குடியினர், காட்டுநாயக்கன் இனத்தவர்கள் சுமார் 18 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இவர்களது வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்பதால் வாழ்வாதாரம் இழந்து உணவு இல்லாமல் குடும்பத்தோடு தவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொண்ட நிலையில்வடலூர் பகுதியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா மண்டபத்தில் அவர்களை தற்காலிகமாக தங்க வைக்க ஆலோசனை வழங்கிய நிலையில் மண்டபம் பூட்டி இருப்பதால் அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று மழைநீரில் தத்தளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் உதவ முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.