விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் நபிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நபிஸ், மனோஜ் பிரேம்குமார், கலைச்செல்வன் மற்றும் அருண்ராஜ் உள்ளிட்டோர் மது அருந்தினர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டதில் பிரேம்குமார் அருண் ராஜின் இடுப்பு பகுதியில் கத்தியால் குத்தி உள்ளார்.
இதில் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த அருண் ராஜை காப்பாற்ற நண்பர்கள் வீட்டில் இருந்து மெயின் சாலைக்கு தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்துள்ளனர்.பின்பு மனோஜ் என்பவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். ஆம்புலன்ஸ் வந்தவுடன் ரத்தவெள்ளத்தில் இருந்த அருண்ராஜை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பியுள்ளனர். ஆனால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அருண்ராஜ் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து விருத்தாசலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் பிரேம்குமார்,மனோஜ்,கலைச்செல்வன், மற்றும் அருண்ராஜ் ஒன்றாக படித்தவர்கள் என்றும் நான்கு பேரும் நெடு நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர் என்பதும்
சென்னையைச் சேர்ந்த மீன்கார பெண் ஒருவருடன் பிரேம்குமார் , அருண்ராஜ் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு இருந்ததாகவும்,இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள மனோஜ், கலைச்செல்வனின் நண்பன் நபிஸ் வீட்டில் நான்கு பேரும் இருந்துள்ளனர்.பிறகு, அய்யம்பேட்டையில் இருந்த அருண்ராஜை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.பின்பு,வாய்த்தகராறு ஏற்பட்டு பிரேம்குமார் அருண்ராஜை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, விருத்தாசலம் போலீசார் மனோஜ்,கலைச்செல்வன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் மற்றும் நபிஸ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.