விருத்தாசலம் மாவட்டம் : தேமுதிக பிரேமலதா உறுதி

விருத்தாசலம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற மாவட்டமாக மாற்றப்பட வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா பிரச்சாரம்.;

Update: 2021-04-03 05:59 GMT

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அவரது கணவரும் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசாவிட்டாலும் கைகளை அசைத்து மக்களை மகிழ்விக்கிறார்.

விருத்தாசலம் பாலக்கரை பகுதிக்கு  பிரசார வேனில் வந்த விஜயகாந்த் வேனில் இருந்தபடி  பொதுமக்களை நோக்கி கைகூப்பி வணங்கினார். கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேட்பாளர் பிரமேலதா விஜயகாந்த் பேசினார்,

' விருத்தாசலம் தொகுதியில் மாபெரும் வெற்றியை எனக்கு நீங்கள் தர வேண்டும். அந்த வெற்றி சரித்திரம் படைப்பதாக இருக்க வேண்டும். லஞ்சம், ஊழலுக்கு துணை போகாதவர், நமது விஜயகாந்த். அவரது இந்த தொகுதி தமிழகத்தின் முதன்மையான, முன்மாதிரியான  தொகுதியாக மாற வேண்டும். அவருக்கென்றே இந்த தொகுதியை நிரந்தர தொகுதியாக மாற்ற வேண்டும். அதற்காகவே  இங்கே வீடு எடுத்து தங்கப் போகிறேன். உங்களுக்காக பணிகள் செய்ய இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு வருவோம் என்று முதன்முதலில் சொன்னவர் நம்ம விஜயகாந்த் தான். ரேஷன் பொருட்கள்  வீடு தேடிக் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

காங்கிரஸ் மற்றும் பா.ம.க வேட்பாளர்கள் இந்த தொகுதி மக்கள் பிரச்சினை குறித்து 2 நிமிடம் பேச முடியுமா? கடந்த 14 நாட்களாக இந்த தொகுதியில் எல்லா இடங்களுக்கும் போய் வந்துவிட்டேன். மக்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளன என்றும்  பார்த்து வந்துவிட்டேன். விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். அதனால், முரசு சின்னத்தில் நீங்கள் வாக்களிக்களியுங்கள். விருத்தாசலம் தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். 

விஜயகாந்த்  உடல் சிறிது பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் தொகுதி மக்களை பார்க்க  ஆவலோடு  வந்துள்ளார். அவருக்கு வாய்ப்பு தந்தது போல எனக்கும் இப்போது வாய்ப்பு தாருங்கள்.' இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News