பால்பண்ணையில் கொத்தடிமையாக இருப்பவர்களை மீட்க கோரி கடலூர் கலெக்டரிடம் மனு
பால் பண்ணையில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்க கோரி கடலூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்கள் குடும்பத்தோடு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் நாங்கள் பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பால் பண்ணையில் வேலை செய்வதற்காக சிவா என்பவரிடம் முன்பணமாக 50,000 பெற்றுக் கொண்டு, கண்ணன், கன்னியம்மாள், பிள்ளைகள் சின்ராசு, சக்திவேல், அஜித், சூர்யா, தமிழ்ச்செல்வி, தேவா மற்றும் அவரது 2 வயது குழந்தை முத்துலட்சுமி, மருமகன் பாக்கியராஜ், அவரது மனைவி சந்தியா ஆகியோரும்,
சந்தோஷ் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டு ராஜேந்திரன் அவரது மனைவி பூங்காவனம் ஆகியோரும் வேலை செய்து வருகிறோம்.
கூலியாக 100 ரூபாய் கொடுப்பார்கள். இரண்டு பேரிடமும் இரண்டு வருடங்களாக வேலை செய்து வருகிறோம். எங்களால் வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை, பிள்ளைகளை படிக்க வைக்கவும் முடியாமல் கடந்த இரண்டு வருடங்களாக கொத்தடிமைகளாக இருக்கிறோம்.
கடந்த 11ம் தேதி ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதாக ஆறு பேர் தப்பித்து வந்தோம். சிவா என்பவரது பால்பண்ணையில் கொத்தடிமைகளாக உள்ள சின்ராசு, சக்திவேல், அஜித், தமிழ்ச்செல்வி, தேவா, முத்துலட்சுமி, பாக்யராஜ் ஆகிய ஏழு பேரையும் மீட்டுத் தரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.