தோழியிடம் ஆசை காட்டி மோசம் செய்த பெண்: 35 லட்சம் அபேஸ்
கோவையில் தோழியிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு, காவல்துறையினர் தேடி வருகின்றனர்
மோசடிகள் பலவிதம், அதில் இது புதுவிதம். கோவையை அடுத்த சூலூர் காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் தாமரை செல்வி (வயது49). இவருக்கும் சிறுமுகை பகுதியை சேர்ந்த செல்வராணிக்கும் அறிமுகம் ஏற்பட்டு தோழிகளாக பழகி வந்தனர்.
அப்போது செவ்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை கொடுத்தால் 30 நாட்களில் ரூ.1.50 லட்சமாக திரும்ப தருவதாக கூறினார். அதை நம்பிய தாமரைச் செல்வி ரூ.1 லட்சம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய செல்வராணி தான் சொன்னபடி ரூ.1.50 லட்சமாக திரும்ப கொடுத்து விட்டார்.
பின்னர் அவர் தான் பெரிய அளவில் வியாபாரம் செய்வதாகவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் கூடுதலாக ரூ.10 லட்சம் சேர்த்து தருவதாக செல்வராணி கூறியுள்ளார். அதை நம்பிய தாமரை செல்வி ரூ.20 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து செல்வராணியின் வங்கி கணக்கில் செலுத்தினார்.
செல்வராணி மேலும் ரூ.15 லட்சம் கேட்டு உள்ளார். அப்போது தாமரை செல்வி தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் வாங்கினார். அந்த பணத்தையும் செல்வராணியின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
ஆனால் ரூ.35 லட்சம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் செல்வராணி பணத்தை திரும்ப தராமல் இருந்து உள்ளார். பல முறை கேட்டும் செல்வராணி பணத்தை திருப்பி தரவில்லை.
இது குறித்து தாமரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல்துறையினர் ரூ.35 லட்சம் மோசடி செய்த செல்வராணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.