வால்பாறையில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோலையார் அணையில் 95 அடி உயரம் தண்ணீர் உள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி;

Update: 2023-10-31 11:39 GMT

வால்பாறை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு   - கோப்புப்படம் 

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அங்கு கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் வால்பாறை, சோலையார்அணை, சோலையார், கவர்கல், நல்லகாத்து, பன்னிமேடு, கருமலை, அக்காமலை, ஊசிமலை, நடுமலை, புது தோட்டம், ரொட்டிக்கடை, ஆகிய எஸ்டேட் பகுதிகளில் லேசாக மழை பெய்யத் தொடங்கியது.

பின்னர் கனமழையாக வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பலத்த மழையால் ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருகிறது.

வால்பாறையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சோலையார் அணையில் தற்போது நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது. 165 அடி உயர அணையில் தற்போது 95 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையின் நீர் இருப்பு 2446.31 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான தண்ணீர் வெளியேற்றம் 418. 69 கன அடியாக உள்ளது.

வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பதிவான மழை அளவு விவரம்:

வால்பாறை: 7 மி.மீ, சின்கோனா- 6 மி.மீ, சோலையார் அணை- 9 மி.மீ. வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக சின்ன கல்லார் பகுதியில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News