பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டு சிக்கி தவித்த தெருநாய்
பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டு சிக்கி 10 நாட்களாக தவித்த தெருநாயை காப்பாற்றிய தன்னார்வலர்கள்;
தலையில் மாட்டியிருந்த டப்பாவை கழற்றியதும் துள்ளிக் குதித்து ஓடிய நாய். (உள்படம்: தலையில் சிக்கிய டப்பாவுடன் சோர்வாக படுத்திருக்கும் நாய்)
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகரில் குமுதம் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது.
அப்போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையை விட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலை சிக்கிக் கொண்டது, நாயால் அந்த டப்பாவை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. பிளாஸ்டிக் டப்பா தலையில் மாட்டியதால் உணவு உண்ண முடியாமல் மிகுந்த சோர்வுடன் படுத்தபடியே கிடந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் கவலைப்பட்டு, எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என பல முறை அதனை அகற்ற முயன்றும் முடியாமல் போனது.
இதனையடுத்து நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.
குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.
10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.