காட்டு யானை தாக்கி பெண் பலி
விறகு சேகரித்துக் கொண்டிருந்த வனத்தாயை யானை தும்பிக்கையால் சுற்றி வளைத்துத் தூக்கி உள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த டாப்சிலிப் பகுதியில் கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் வனத்தாய் (வயது55) இவரது கணவர் பெயர் பரமன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள் ஒரு மகன் உள்ளனர்.
வனத்தாய் தன்னுடைய தாயார் ராமாத்தாள் (வயது 85) உடன் வசித்து வருகிறார். நேற்று தாயும் மகளும் கூமாட்டி அருகிலுள்ள ஒலவரை மலை அடிவாரத்திற்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது, புதருக்குள் ஒரு காட்டு யானை நின்றுகொண்டு இருந்தது. விறகு சேகரித்துக் கொண்டிருந்த பெண்களை பார்த்த காட்டுயானை வேகமாக வந்து வனத்தாயை தும்பிக்கையால் சுற்றி வளைத்துத் தூக்கி உள்ளது. இதை பார்த்த ராமாத்தாள் பயந்து ஓட்டம் பிடித்தார். சுமார் 100 அடி தூரம் வரை வனத்தாயை இழுத்துச் சென்ற காட்டு யானை தும்பிக்கையால் அவரை அடித்துக் கொன்றது.
இதுகுறித்து ராமாத்தாள் வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அதன்பின் அங்கு உள்ளவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது யானை இறந்து போன வனத்தாயின் உடல் அருகே நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த டாப்சிலிப் ரேஞ்சர் நவீன் குமார் மற்றும் வனத்துறையினர் யானையை விரட்டி விட்டு அவரது உடலை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.