வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு
கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.;
கோவை மாவட்டம் வால்பாறைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வருகை தந்தார். அவருடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியாளர் நாகராஜ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி மற்றும் இதர பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
மலைப்பிரதேசம் என்பதால் வால்பாறைக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை செய்ய வந்துள்ளேன். இப்பகுதி பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன் அதற்காக பாடுபடுவேன் என்றார். இதையடுத்து வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.