கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடங்கல்: வருத்தத்தில் வால்பாறை மாணவர்கள்
கோவை மாவட்டம் வால்பாறையில், கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு தெரியாததால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்
கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையுள்ளது.
இந்த சூழலில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், கேபிளில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் மலைவாழ் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் பரமசிவம், முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பரமசிவம் கூறுகையில், "வால்பாறை பகுதியில் 95 சதவீதம் பேர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் அரசு கேபிள் வருவதில்லை. தனியார் கேபிள்களில் கல்வித் தொலைக்காட்சி வருவதில்லை.
கல்வித் தொலைக்காட்சி சேனல், ஒளிபரப்பும் கேபிள் வால்பாறை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மலைப்பகுதி என்பதால் சரியாக சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் கல்வி பயில்வதை உறுதிபடுத்த வேண்டும்" என்றார்.