அரசு பட்டா வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றிய வனத்துறையினர்

வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழங்குடிகள் தெரிவித்தனர்.;

Update: 2021-12-03 09:15 GMT

குடிசைகளை அகற்றிய வனத்துறையினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார்குடி பகுதியில் 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் சேதமடைந்தன. இதையடுத்து தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தற்கு, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பழங்குடிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர், அருகேயுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்க வைத்தனர்.

இதனிடையே தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டுமென கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் வருவாய் துறை, வனத்துறை, நில அளவைத் துறை இணைந்து தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு செய்யப்பட்டது. அதன்படி அண்மையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தெப்பக்குள மேட்டில் 21 குடும்பங்களுக்கு ஒன்றரை செண்ட் வீதம் நிலத்திற்கான பட்டாக்களை வழங்கினார்.

தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் பழங்குடி ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் புதிய இடத்தில் குடிசைகளை அமைக்கப்பட்டதாக இது கூறி, குடிசைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் வனத்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு பட்டா வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகளை வனத்துறையினர் அத்துமீறி அகற்றியுள்றதாகவும், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழங்குடிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News