வால்பாறையில் தொடர் மழை: ஆழியார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆக உள்ள நிலையில், தற்போது 118.65 அடி வரை உயர்ந்துள்ளது;
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வால்பாறை மற்றும் சின்னகல்லர், சோலையார் அணை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, சிற்றோடைகள் வழியாக நீர் பெருக்கெடுத்து வருவதால், ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆக உள்ள நிலையில், தற்போது 118.65 அடி வரை உயர்ந்துள்ளது. நீர்வரத்து 227 கன அடியும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 592 கனஅடி ஆகவும் உள்ளது. ஆழியார் அணை ஒட்டியுள்ள பகுதிகளில் 23 மில்லி மீட்டர்மழை அளவு பதிவாகி உள்ளது. இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.