பொள்ளாச்சி திவான்சாபுதூர் ஊராட்சியை கைப்பற்றிய திமுக
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்திலும், அதிமுக சார்பில் சரோஜினி முனியன் பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். திவான்சாபுதூர் ஊராட்சியில் 12வார்டுகள் உள்ளன. அதில் 8572 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 6552 பதிவான வாக்குகள் பதிவாகின.
அந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் 4372 வாக்குகளும், அதிமுக வேட்பாளார் சரோஜினி முனியன் 2075 வாக்குகளும் பெற்றனர். 105 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அதிமுக வேட்பாளர் சரோஜினி முனியன் விட 2297 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி சாய் ராஜ் சுப்பிரமணியமிடம் கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதுக்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் திமுக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் வார்டு இடைத்தேர்தல், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி தேர்தலிலும் திமுக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இருபத்தி ஐந்து வருடமாக அஇஅதிமுகவினர் மக்களை அடிமைபடுத்தி வைத்திருந்தனர். அஇஅதிமுக 12 வார்டுகளிலும் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வெற்றியை திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.