சிங்கங்களை தொடர்ந்து கும்கி யானைகளுக்கு கொரோனா பரிசோதனை..!
உயிரியல் பூங்காக்களில் உள்ள அனைத்து விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானை முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் பாதித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 5 சிங்கங்களுக்கு கடந்த மே 26 ஆம் தேதி உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் அழைக்கப்பட்டு 11 சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ததனர். இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 3ஆம் தேதி மாலை 9 வயது நீலா என்கிற பெண் சிங்கம் உயிரிழந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள அனைத்து விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானை முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால், விலங்குகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம்களில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் கும்கி யானைகளுகு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இங்குள்ள 28 கும்கி யானைகளுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. யானைகளின் சளி மாதிரிகளை உத்தரப் பிரதேசத்திலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.