தீபாவளியையொட்டி கோவை மாநகரில் 150 டன் குப்பைகள்
தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பை தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பைகளையும், பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து வைத்து பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டும் பணியை மேற்கொள்வார்கள்.
நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த 2 நாளாக கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் 1,350 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சில தூய்மை பணியாளர்கள் விடுமுறையில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள் என்பதால் நாளை அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.