ஆலாந்துறை அருகே நாட்டு வெடி பயன்படுத்தி முயல் வேட்டையாடிய இருவர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.;

Update: 2024-07-17 05:44 GMT

முயல் வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட இருவருடன் வனத்துறை அதிகாரிகள்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த பூளுவப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 28 வயதான இவர் முயல் வேட்டைக்கு அவுட்டு காய் பயன்படுத்தி வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் வனத்துறையினர் மணிகண்டனை பிடித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டன், வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் இருந்து அவுட்டுகாயை பெற்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வனத்துறையினர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கு இருந்து 2 அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ரங்கசாமி யாரிடம் இருந்து அவுட்டு காய்களை வாங்கினார், எவ்வளவு பேர் முயல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முயலை வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் குற்றமாகும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் முயல் வேட்டை நடப்பதாக வனத் துறையினருக்கு அடிக்கடி புகார்கள் வரும் நிலையில், இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாடுவது சட்ட விரோதமானது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News