அனுமதியின்றி வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்
யாரிடமும் அனுமதி இல்லாமல், வனத் துறையினரின் எச்சரிக்கை மீறி வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.;
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை தென்கைலாயம் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கோவையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலை, ஆன்மிக தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வௌகிறது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற காலங்களில் பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் வனப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாரிடமும் அனுமதி இல்லாமல், வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி சிலர் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. மலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது, அதில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடக் கூலித் தொழிலாளி முனியராஜ் என்பவர் காணவில்லை என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. தகவலின் பெயரில் ஐந்து பேர் கொண்ட குழு மலைக்குச் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து ஆலந்துறை காவல் துறையினரும் விசாரணை நடத்தி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.