வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதியில் விடுவிப்பு

வ.உ.சி வன உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டதால் கடமான்கள் காட்டில் விடப்பட்டன.

Update: 2024-07-12 09:36 GMT

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கடமான்கள்

கோவையில் உள்ள வ.உ.சி வன உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என சென்னை முதன்மை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர் ஆணை பிறப்பித்தனர். பின்னர் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் உயிரினங்களை வனப்பகுதியில் விடுவிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்காவில் இருந்த புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்டவை வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கடமான்களின் புழுக்கைகளை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, அவற்றிக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது. பின்னர் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது. கடந்த 4 ம் தேதியன்று 5 கடமான்கள் போலம்பட்டி சரக காப்பு காட்டில் விடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், வனச்சரக பணியாளர்கள், வனமண்டல வன கால்நடை அலுவலர், வஉசி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் 5 கட மான்களை பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் 5 கடமான்களும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட கடமான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News