வெள்ளியங்கிரி மலையேறிய ஒருவர் உயிரிழப்பு
இந்தாண்டில் இதுவரை மலையேறிய ஆறு பக்தர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்ணம் உள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த வாரம் மலை ஏறிய பக்தர்கள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் என்பவர் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறினார். அப்போது ஐந்தாவது மலை சீதை வனம் அருகே அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடன் சென்றவர்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் நேற்று மாலை 5 மணிக்கு சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற வனத் துறையினர் அவரை மீட்டு அங்கிருந்து பூண்டி அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்து பார்த்தனர். அப்போது அவரை பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ஆலந்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை மலையேறிய ஆறு பக்தர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.