கோவை அருகே விதிமுறைகளை மீறி மண் எடுத்த விவகாரம்; நீதிபதிகள் நேரில் ஆய்வு
சட்ட விரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.;
கோவை மாவட்டம் பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். சட்ட விரோதமாக மணல் கடத்தும் நபர்களை உடனடியாக தடுத்து அவர்களை கைது செய்து இயந்திரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடாக சட்ட விரோதமாக மண் எடுப்பதும், செங்கல் தயாரிப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடுக்க சூளைகளுக்கு சீல் வைக்கவும் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வந்த செங்க சூலை உரிமையாளர்கள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பேரூர், மாதம்பட்டி, கரடிமடை போன்ற பகுதிகளில் கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாராயணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி ரமேஷ், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் இந்த ஆய்வு குறித்தான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.