ஒரு வயது குழந்தையை கொலை செய்த பாட்டி கைது
பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் குழந்தை உயிரிழந்தது.
கோவை லாலி ரோடு அருகேயுள்ள அம்பகம் வீதியை சேர்ந்தவர் நந்தினி. நந்தினி மற்றும் அவரது கணவர் நித்யானந்தம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 8 மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். முதல் மகன் சாய்கிருஷ்ணாவை நித்யானந்தமும், இரண்டாவது மகன் துர்கேஷை நந்தினியும் வளர்த்து வந்தனர். நந்தினி தனது தாய் நாகலட்சுமி மற்றும் துர்கேஷ் உடன வசித்து வந்தார்.
நந்தினி ஹோட்டல் வேலைக்கு சென்று வந்த நிலையில், குழந்தை துர்கேஷை நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ம் தேதி இரவு நந்தினி தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை பார்த்த போது, வாயில் நுரை தள்ளி மயக்க நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது, வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சாய்பாபாகாலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் துர்கேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது குழந்தை துர்கேஷ் முகத்திலும், வாயிலும் காயங்கள் இருந்ததும், நாகலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதும் காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகலட்சுமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, துர்கேஷ் பிறந்த நேரத்தினால் தான் மகளும், மருமகனும் பிரிந்ததாகவும், அதனால் குழந்தையின் தலையை சுவரில் அடித்ததோடு பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நாகலட்சுமியை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.