அமைச்சருக்கு தோல்வி பயம் : திமுக வேட்பாளர் சொல்கிறார்
அமைச்சர் வேலுமணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கூறினார்.;
கோவை, வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் தொண்டாமுத்துர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். அதில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமை ரத்து, வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா, தொண்டாமுத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மனித - வனவிலங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திகேய சிவசேனாதிபதி, ' உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த ஊழலைப் பற்றி பேசுவது தனிமனித தாக்குதல் அல்ல. எஸ்.பி.வேலுமணி தான் என் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். திண்டுக்கல் லியோனி பெண்கள் பற்றி பேசிய கருத்து வருத்தத்திற்கு உரியது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தானவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், தனிமனித தாக்குதல், புரளிகளை பரப்பிக் கொண்டுள்ளார் என்று கூறினார்.