கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை
கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.;
கோவையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய கோவை மாவட்ட ஆட்சியாளர் தடை விதித்துள்ளார்.
ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்து பின்னர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு வருடம்தோறும் நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நொய்யல் ஆறு பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனால் தர்ப்பணம் மண்டபம் மற்றும் நொய்யல் ஆற்றங்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் நொய்யல் ஆற்று பாலத்தில் நின்று வழிபாடு செய்து செல்கின்றனர். தடையை மீறி வரும் பக்தர்களை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.