திமுகவை கண்டித்து அல்வா வழங்கி பாஜக நூதன போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் முகமூடியுடன் பொதுமக்களுக்கு பாஜகவினர் அல்வா வழங்கினர்.

Update: 2024-03-10 08:00 GMT

அல்வா வழங்கி பாஜக போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் மோடி சுட்ட வடைகள் என்ற துண்டு பிரசுரம் மற்றும் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்த நிலையில் திமுக பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திமுக அரசை கண்டித்து, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் முகமூடியுடன் பொதுமக்களுக்கு பாஜகவினர் அல்வா வழங்கினர். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா தந்து ஏமாற்றி விட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுக, நீட் ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல், கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர். திமுக அரசு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றியதை கண்டிக்கும் வகையில் அல்வா வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் தெரிவித்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News