கோவை குற்றாலத்தில் நீர்வரத்து கிடுகிடு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.;
கோவையின் முக்கிய சுற்றுலா தலமாக, கோவை குற்றாலம் உள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 6 ம் தேதி முதல், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலத்தில், நாளை முதல் வரும் 12 ம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.