வீட்டின் கம்பவுண்டு சுவரை உடைத்த காட்டு யானை ; மக்கள் அச்சம்

Coimbatore News- வீட்டின் உள்ளே நுழைந்து சுற்றுச் சுவரை இடித்து யானை வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2024-07-31 04:15 GMT

Coimbatore News- காட்டு யானை

Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளுக்கு உணவு, தண்ணீரை தேடி வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருள்கள் இருக்கும் இடங்கள், விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கிறது. வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தொண்டாமுத்தூர் மத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஒரு ஆண் காட்டு யானை புகுந்தது. அப்போது அந்த காட்டு யானை ஒரு வீட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. யானை வீட்டின் உள்ளே நுழைந்ததை கண்டு அருகில் வசிப்பவர்கள் சத்தம் எழுப்பிய நிலையில், வீட்டின் காம்பவுண்டு சுவரைத் தாண்டி செல்ல முயன்றது. இதில் சுவர் இடிந்து விழுந்த நிலையில், குடியிருப்பு பகுதி வழியாக யானை மறுபுறம் வெளியேறி சென்றது. யானை வீட்டின் உள்ளே நுழைந்து சுற்றுச் சுவரை இடித்து வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நுழையும் யானைகளை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News