சூலூர் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை
கண்காணிப்பு காமிரா மூலம் கொள்ளையர் உருவம் தெரிந்தததையடுத்து ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் அருகே உள்ள செங்கத்துறையில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சுப்பாத்தாள் (வயது 65) என்பவரது வீடு உள்ளது.
சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். சுப்பாத்தாளும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார்.
நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 2 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தாலி செயின் மற்றும் அம்மனின் 5 கிலோ வெள்ளி கீரிடம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் மர்மநபர்கள் கோவிலின் அருகே உள்ள சுப்பாத்தாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டும், அருகே உள்ள வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அம்மனின் கீரிடம் மற்றும் தாலி செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.