தைப்பூச திருவிழா: மருதமலை முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்

மருதமலை முருகன் கோவில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் தைப்பூச தேர்த்திருவிழாவுக்கான சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

Update: 2023-01-29 07:10 GMT

மருதமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் 

கோவை மருதமலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கோ பூஜை செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு ராஜ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் முன் மண்படத்தில் கற்பக தங்க விருட்சக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து யாகங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காலை 6.45 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கோவில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் தைப்பூச தேர்த்திருவிழாவுக்கான சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முகூர்த்தக்காலும் நடப்பட்டது.

கொடியேற்றத்தை காண்பதற்காக கோவை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்ற நிகழ்வின் போது அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அனந்தசாசனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 6 மணிக்கு யாக சாலை பூஜையும் நடைபெறும்.

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

பிப்ரவரி 3-ம் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண விழா பிப்ரவரி 4ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும், அதையடுத்து காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறும்.

சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

5ம் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது., 6ம் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ம் தேதி நடைபெறும் வசந்த உற்சவத்தில், மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப் பூச விழா நிறைவு பெறுகிறது.

தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News