கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர் விமானப்படை அதிகாரிகள்
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் சார்பில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில், மாநகரப்பகுதிகளுக்கு பிறகு அதிக பாதிப்புள்ள இடமாக சூலூர் பகுதி உள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
காடாம்பாடி, காங்கேயம் பாளையம், செங்கத்துறை ஆகிய பகுதிகள் சூலூர் விமானப்படை தளத்துக்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் காவல்துறையால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கு விமானப்படைத்தள நல்வாழ்வு சங்கம் சார்பில், அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. காங்கேயம்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை விமானப்படை அதிகாரிகள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது காங்கேயம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.