டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக சூலூர் எம்‌.எல்.ஏ. கந்தசாமி பங்கேற்றார்‌.;

Update: 2021-11-25 15:00 GMT

டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கள்ளப்பாளையம் கிராம மக்கள்.

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி கள்ளப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

கிராமத்தில் புதிதாக மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கடை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்தும் மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரியும், கள்ளப்பாளையம் கிராம மக்கள் பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமியும், பொதுமக்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்‌.

Tags:    

Similar News