வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.;
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர்கள் தங்கி பணி புரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு பணி நேரத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி உள்ளது .
இதனை அடுத்து விடுதியில் தங்கியிருந்த இரு மாநிலத்தை சேர்ந்த நபர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவத்திற்கு காரணமான இரு நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.