குட்கா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதன் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம்(36) மற்றும் மோதிலால் (40) ஆகிய இருவரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது பான்மசாலா குட்கா போன்ற விற்பனையில் ஈடுபட்டது குறித்து பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குற்றவாளிகள் குறித்த ஆவணங்களை சரிபார்த்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் சீதாராம் மற்றும் மோதிலால் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.