பயணிகளுக்கு உதவ கோவை விமான நிலையத்தில் ரோபோக்கள் அறிமுகம்
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் விமான நிலையத்திலேயே உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற இயலும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரி கூறும் போது, கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்றும் இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனர்.
மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் எனவும் இதற்காக ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும் என்றும் இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் என கூறினார்.