கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி திமுக வசம்: காங்கிரஸ் அதிர்ச்சி
கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.;
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. திமுக 19, காங்கிரஸ் 2, அதிமுக மற்றும் சுயேச்சைகள் தலா 3 வார்டுகளில் வெற்றி பெற்றன. திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் கருமத்தம்பட்டி நகராட்சியை கைப்பற்றியது.
கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் 25 வது வார்டில் வெற்றி பெற்ற பாலசுப்பிரமணியம், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு 20வது வார்டில் வெற்றிப் பெற்ற திமுகவின் ஒன்றிய செயலாளர் நித்யா மனோகரன், தலைமை உத்தரவை மீறி போட்டியிட்டார்.
மறைமுக தேர்தலின் போது, 22 வாக்குகள் பெற்ற நித்யா மனோகரன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 5 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியதை கண்டித்து, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.