திராவிடம் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - கோவை எம். பி. கணபதி ராஜ்குமார்..!
சாதியை வைத்து நம்மை ஆண்டவர்கள் பிரித்தனர். அதை உடைத்தது திராவிடம் தான்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர மாணாக்கர்களுக்கான தொடுவானம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், “திராவிடம் பற்றி மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் ஏன் திராவிட கட்சிகளுக்கு முக்கியம் கொடுக்கின்றார்கள் என்றால், அது கடந்து வந்த பாதை முக்கியமானது.
தனிமனித சுதந்திரம் முக்கியமானது. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் இருப்பது தான் முக்கியம். சாதியை வைத்து நம்மை ஆண்டவர்கள் பிரித்தனர். அதை உடைத்தது திராவிடம் தான்.திராவிடம் குறித்து மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என பெரியார் சொல்லி விட்டு சென்றுள்ளார். அதன் வழியில் வருவது தான் திராவிடம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டுமின்றி நிறைய படிப்புகள், வாய்ப்புகள் உள்ளது, அதையெல்லாம் தெரிந்து கொண்டு, அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும். மாணவர்களின் சாதனைக்கு இந்த அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்..
இதனைதொடர்ந்து பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “தமிழக முதல்வருக்கு மிகவும் பிடித்த துறை நம்முடைய தான். சமூக நீதி ஆட்சி என்பதற்கு உதாரணமாக இருக்க கூடிய துறை நம்முடையது. வாழ்கையில் முன்னேற்றம் என்றால் கல்வி, பொருளாதாரம். இவை இரண்டு முக்கியம்.
இதை சொல்லுவதற்கு இந்த தொடுவானம் திட்டம் உதவியாக இருக்கிறது. எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்லூரி படிப்பவர்கள் உங்களுடைய உயர் கல்வியை நன்றாக திட்டமிட வேண்டும் எனவும் உங்கள் திறமைகளை கண்டறிந்து அந்த துறையில் பயணிக்க வேண்டும்.
வெளிநாட்டில் படிக்கவும் இந்த அரசு உதவி செய்கிறது. நடப்பாண்டில் மட்டும் 36 பேர் வெள நாட்டில் படிக்கின்றனர். விரும்பியதை படிக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக தாட்கோ அமைப்பு உங்களுடன் இருக்கிறது. தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் வழங்கபடுகிறது. இதை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்த முன் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.