கோவை மாவட்டத்தில் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
கோவை மாவட்டத்தில் வருகிற 14 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.;
இந்தியாவில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளில், 24.1 கோடி பேருக்கு குடற்புழு தொற்று அபாயம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிந்துள்ளது.
இதனால், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும், பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வைட்டமின், 'ஏ' சத்து குறைவு ஏற்படுகிறது.இதை தவிர்க்க, நாளை, நாடு முழுவதும் அங்கன்வாடி மையம், பள்ளிகளில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
குடற்புழு நீக்க சிறப்பு முகாம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
இந்த சிறப்பு முகாம் மூலம் கோவை மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயதுடைய 10 லட்சத்து 5 ஆயிரத்து 843 குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 324 பெண்கள் (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) பயனடைய உள்ளனா்.
இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: குடற்புழு நீக்க சிறப்பு முகாம்கள் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 658 தனியார் பள்ளிகள், 1,213 அரசு மற்றும் 177 அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 328 துணை சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளன.
இந்த முகாமில் அல்பெண்டசால் என்னும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.