நகையை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிய தம்பதி
தங்க நகையை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகள் கொடையளித்த தம்பதி
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர் சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவுறுத்தி இருந்ததால், கொரோனா வார்டில் அரசு சார்பில் 300 மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலம் என்பதாலும் மின் விசிறிகள் குறைவாக இருந்ததாலும் காற்று இல்லாமல் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மின்விசிறிகளை வழங்கலாம் என அம்மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்தரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ரேடியோவில் கேட்டு வந்த பெயர் மற்றும் விபரங்களை வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்தரனிடம் 100 மின்விசிறிகளை வழங்கியுள்ளனர். பணம் இல்லாததால் தங்க நகைகளை அடகு வைத்து 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மின்விசிறிகளை வாங்கி வழங்கியுள்ளனர். பெயர் மற்றும் விவரங்களை வெளியிட விரும்பாத தம்பதியின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.