ஒண்டிப்புதூரில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஓருவர் தாக்கி கொள்ளும் வீடியோ வைரல்
கோவை ஒண்டிப்புதூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஓருவர் தாக்கி கொள்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரல்
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியதை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்வதும், வகுப்பறையில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது தொடர்பான வீடியோக காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் சம்பந்தபட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவும் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட வேண்டாம் என பள்ளி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவையில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால், அங்கு பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவிகளும், பயணிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாணவர்கள் தாக்கிக்கொள்ளும் காட்சிகளை காரில் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமுக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.