கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது
வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை கீரணத்தம் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இஸ்மி ஸ்டெப் வின்ஸ் (32) என்பதும், கீரணத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கல்லூரி படிப்புக்காக கடந்த 2017ஆம் ஆண்டு கோவை வந்த அவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்ததும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியுடன் விசா முடிந்த நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.